கோலாலம்பூர், அக்டோபர் 18 – தீபாவளியை முன்னிட்டு அரசாங்க வானொலியான மின்னல் பண்பலை சார்பில் மலேசிய ஊடகங்களுக்கு இரவு விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நேற்று இரவு அங்கசாபுரியிலுள்ள பி.ரம்லி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாட்டின் பெரும்பாலான ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வண்ணமயமான ஆடைகளுடன் மின்னல் அறிவிப்பாளர்கள் உற்சாகத்தோடு அனைவரையும் வரவேற்றனர். மின்னலின் இளம் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் அலியா ஆகிய இருவரும் இணைந்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழி நடத்தினர்.
(டத்தோ பக்கார் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்)
நடனக்குழுவினரின் ஆடல், பாடல் என நிகழ்ச்சியில் தீபாவளி களை கட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியின் இறுதியில் ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு, மின்னல் பண்பலை நிர்வாகி எஸ்.குமரன் முன்னிலையில், ஆர்டிஎம் துணை இயக்குநர் டத்தோ ஹாஜி அபு பக்கார் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
(வானொலி அறிவிப்பாளர்கள் தெய்வீகன் மற்றும் அலியா)
மேலும், இந்நிகழ்வில் தீபாவளியை முன்னிட்டு மின்னல் பண்பலையில் ஒலியேற்றப்படவுள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை திரையிட்டுக் காட்டப்பட்டன.
அதில் சிறப்பு அம்சமாக “மியான்மார் தமிழர் வரலாறு ஒரு தேடல்” என்ற தலைப்பில் அக்டோபர் 23-ம் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒலியேற்றப்படவுள்ளது.
மின்னல் அறிவிப்பாளர்கள் தெய்வீகன் தாமரைச்செல்வன், புவனா வீரமோகன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மியான்மார் நாட்டிற்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்கு உள்ள தமிழர்களின் வரலாற்றை அவர்கள் அலசி ஆராய்ந்து இந்நிகழ்ச்சியைப் படைக்கின்றனர்.
இது தவிர தீபாவளி சிறப்பு நாடகம், குரல் இசை, தாலாட்டுதே வானம் “தீபாவளி வாழ்த்து நேரம்”, தீபாவளி இசை நிகழ்ச்சி, அன்பு இல்ல குழந்தைகளுடன் தீபாவளி ஆகியவை அடுத்த வாரம் தொடங்கி ஒலியேற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்