லண்டன், அக்டோபர் 18 – இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஐரோப்பிய ஒன்றியம், தற்போது புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அதன்படி, இந்தியாவுடனான உறவிற்கு ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஃப்ரீ வான் ஆர்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய அளவில் இந்தியா, தற்சமயம் சிறந்த பொருளாதார நாடாக உருவாகி வருகின்றது. நீண்ட வருடங்கள் கழித்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், உலக நாடுகளிடத்தில் நேர்மறையான எண்ணத்தை இந்தியாவின் மீது ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவில் அதிக அளவு முதலீடுகளை செய்வதற்கு முன்வந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடனான நிலையான உறவினைப் பாதுகாக்க, அந்நாட்டுடன் நீண்ட காலமாக தொடர்பைக் கொண்டிருக்கும் ஜெஃப்ரீ வான் ஆர்டனை நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
இந்த நியமனம் குறித்து ஜெஃப்ரீ வான் கூறுகையில், “பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக இந்தியாவின் இராணுவக் கல்லூரியில் பயின்ற காலம் முதல், எனக்கு இந்தியாவிடம் எப்பொழுதும் அதிகப் பிடிப்பு உண்டு.
இந்தியாவிலுள்ள எனது தொடர்புகளை இன்னும் நெருக்கமாகப் பேணி வருகின்றேன். இந்தியாவின் பிரதமர் மோடி தற்சமயம் நாட்டின் வளர்ச்சிக்கான பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் இது உலக நாடுகளுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.