சென்னை, அக்டோபர் 18 – பெங்களூரு சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ள ஜெயலலிதா ஒரு சிறப்பு விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு நல்கப்பட்டது.
சிறையிலிருந்து வாகனத்தில் வெளியாகி, விமானம் நிலையம் நோக்கிச் செல்லும் ஜெயலலிதா…
இன்று மாலை 6.10 மணியளவில் ஒரு சிறப்பு விமானத்தில் ஜெயலலிதா சென்னை வந்து சேர்ந்தார்.
முன்னதாக பிற்பகல் 3.30 மணியளவில் பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து உச்ச நீதிமன்ற பிணை மீதான நடைமுறைகள், ஆவணங்கள் நிறைவு செய்யப்பட்டு, ஜெயலலிதா சிறையை விட்டு வெளியே வந்தார்.
அதற்கு முன்பாகவே, நடைமுறைகள் நிறைவு பெற்றிருந்தாலும், எதிலும் நல்ல நேரம் பார்க்கும் ஜெயலலிதா, 3.30 மணிக்குப் பின்னரே நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
அவர் நல்ல உடல் நிலையோடு இருப்பதாக கர்நாடக சிறை தலைமைக் காவல் அதிகாரி கேவி.காகன்டீப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
சிறையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜெயலலிதாவை வரவேற்க, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறை வாசலில் திரண்டிருந்தனர்.
ஜெயலலிதாவை ஏற்றிக் கொண்ட வாகனம் சிறையிலிருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்டபோது அவரைப் பின்தொடர்ந்து பாதுகாப்புக்கு காவல் துறை வாகனங்களும், மற்றும் ஏறத்தாழ 10 தனியார் வாகனங்களும் பின்தொடர்ந்தன.
சாலைகளின் இருபுறத்திலும் குவிந்திருந்த அவரது ஆதரவாளர்களும், அதிமுக உறுப்பினர்களும் ஆரவாரத்தோடு அவருக்கு கையசைத்து, வாழ்த்து முழக்கங்களோடு வழியனுப்பி வைத்தனர்.
அவர் செல்லும் வழியெங்கும் பட்டாசுகளும் கொளுத்தப்பட்டன.
(அடுத்த கட்டம் – சென்னையில் ஜெயலலிதா….)