Home இந்தியா மீண்டும் போயஸ் கார்டனில் அம்மா! அதிமுக கொண்டாட்டம்!

மீண்டும் போயஸ் கார்டனில் அம்மா! அதிமுக கொண்டாட்டம்!

734
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, அக்டோபர் 18 – சிறப்பு விமானத்தில் சென்னை வந்த ஜெயலலிதா “அண்ணா கூறியது போல் எதையும் தாங்கும் இதயம் நமக்கு வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ, வழக்கு குறித்தோ, நீதிபதி குறித்தோ யாரும் குறை கூறி எதையும் கூறக் கூடாது. அமைதி காக்க வேண்டும்” என அறைகூவல் விடுத்துள்ளார்.

21 நாள் சிறைவாசத்தை அனுபவித்ததோடு, தனது முதல்வர் பதவியையும் இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா இழந்தார்.

பிணை நடைமுறைகள் நிறைவு பெற்றன

#TamilSchoolmychoice

உத்தரவாதங்களுடன் கூடிய பிணை அனுமதியை உச்ச நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் வழங்கியது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

இரண்டு கோடி ரூபாய்க்கான உத்தரவாதப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, ஒரு கோடிக்கும் கூடுதலான சொத்துக்கள் மீதிலான பத்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணை நடைமுறைகளை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிறைவு செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அதிகாரபூர்வ பிரதி ஒன்றையும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.

இன்று ஜெயலலிதாவோடு, அவரது நெருங்கிய தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னையில் ஜெயலலிதா…

மாலை சுமார் 5 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் நேராக போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது இல்லம் நோக்கி ஜெயலலிதா சென்றார். பிணை உத்தரவுப்படி, அவர் வழக்கு முடியும்வரை தனது இல்லத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது பிணையின் கட்டுப்பாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Jaya leaving from Bangalore jailதனது இல்லம் நோக்கி செல்லும் வழியில் கூடியிருந்த ஆதரவாளர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதற்காக அவரது வாகனம் பல இடங்களில் மெதுவாக செலுத்தப்பட்டது.

ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தபடியே ஜெயலலிதா சென்றார்.

கோட்டூர்புரத்திலுள்ள விநாயகர் ஆலயத்தின் முன் சற்று நேரம் அவரது வாகனம் நிறுத்தப்பட்டு, காரில் இருந்தபடியே விநாயகரை நோக்கி ஜெயலலிதா வணங்கினார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்றும், ஜெயலலிதா பெங்களூர் செல்லும் வழியில் இதே ஆலயத்தில் வாகனத்தை நிறுத்தி வணங்கி விட்டு சென்றார்.

விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்திற்குப் பின்னர் போயஸ் கார்டனிலுள்ள தனது இல்லத்தை ஜெயலலிதா அடைந்தார்.

இனி அடுத்த கட்ட வியூகம் என்ன?….

இனி தனது அடுத்த கட்ட அஸ்திரங்களை ஜெயலலிதா தனது இல்லத்திலிருந்து வியூகம் வகுத்து செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் கட்டமாக போதிய ஓய்வு எடுத்த பின்னர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யும் வழக்கின் மேல் முறையீடு குறித்துத்தான் இனி அவரது முழு கவனமும் செல்லும்.

அதே வேளையில் தமிழக அரசியலின் அதிகாரப் பிடி இன்னும் தன் கரங்களில்தான் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டும் வண்ணம் நடப்பு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதிலும், கட்சித் தலைவர்களுடன், அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசிப்பதிலும் அவரது நேரமும், கவனமும் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு கோணத்தில் பார்த்தால், தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவுக்கு கிடைத்திருக்கும் தண்டனையால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும்,

இன்னோரு கோணத்தில் பார்த்தால்,

இந்த வழக்கால், ஜெயலலிதாவின் செல்வாக்கும் ஆதரவும் தமிழகத்தில் விசுவரூபமெடுத்து நிற்கின்றது.

நடுநிலையாளர்கள் மத்தியிலும், ஜெயலலிதாவைத் தீவிரமாக எதிர்க்காதவர்கள் மத்தியிலும் இந்த வழக்கின் மூலம் கூடுதல் அனுதாபம் ஜெயலலிதா பக்கம் திரும்பியிருக்கின்றது.

அந்த ஆதரவைக் கொண்டு, 2016இல் நடைபெறப் போகும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஜெயலலிதா தலைமையில் அமரும் என்றும் ஒரு சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.