முன்னணி திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள் , சாம்சுங் மற்றும் எல்ஜி போன்றவை திறன்பேசிகளின் தயாரிப்புடன் சேர்த்து திறன் கைக்கடிகாரங்களையும் தயாரித்து வருகின்றன.
திறன்பேசிகளைப் போன்று பல்வேறு வசதிகள் திறன் கைக்கடிகாரங்களிலும் உள்ளதால், இதற்கென பல பயனர்கள் அதன் வரவை எதிர்நோக்கி உள்ளனர்.
சாம்சுங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி திறன்பேசிகளுடன் வெளியிட்ட ‘கியர்’ (Gear) திறன் கைக்கடிகாரங்களுக்கு சந்தைகளில் பெரும் வரவேற்பு இருந்தது.
திறன்பேசிகளுடன் இணைந்து இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கடிகாரங்கள் மூலம், குறுதகவல் அனுப்புதல், அழைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியும்.
சந்தைகளில் திறன் கைக்கடிகாரங்களுக்கான வரவேற்பை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், பலதரப்பட்ட செல்பேசித் தளங்களில் இயங்கும் வகையில் புதிய திறன் கைகடிகாரங்களை உருவாக்கி உள்ளது.
எனினும், பயனர்கள் அதற்காக சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கும். சுமார் இரண்டு நாட்கள் வரை தாங்கும் மின் திறன் கொண்ட மின் சேமிப்புக்கலன் இந்த புதிய கைக்கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இது மைக்ரோசாப்ட்-ஐ மற்ற நிறுவனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என்று மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த மாதம் 9-ம் தேதி, ஆப்பிள் நிறுவனம் தகவல் தொடர்பு கொண்டு உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்புகளை ஆராயும் புதிய திறன் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.