துபாய், அக்டோபர் 21 – வளைகுடா நாடுகளுக்கான ஒருங்கிணைந்த விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணப்பட வேண்டுமானால் பயணிகள் ‘செங்கென் விசா'(Schengen visa)-வைப் பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 நாடுகள் மட்டுமல்லாமல் அவற்றின் உறுப்பினர் அல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள முடியும். இந்த நடைமுறை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த பலனை அளிப்பதாக உள்ளது.
இதே போன்றதொரு ஒருங்கிணைந்த விசா நடைமுறையை வளைகுடா நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் பின்பற்ற இருப்பதாக குவைத் நாட்டின் வர்த்தகதுறை உயர் அதிகாரி சமீரா அல் கரீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “ஒருங்கிணைந்த சுற்றுலா விசா முதல் கட்டமாக 35 நாட்டினருக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இதன் மூலம் வர்த்தகமும், சுற்றுலாத் துறையும் மிகுந்த பலனை அடையும்” என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், ஒருங்கிணைந்த விசா பெறும் 35 நாடுகள் எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. தற்போது வளைகுடா நாடுகளில் தனித்தனியான விசா நடைமுறைகளே உள்ளன. இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த பொதுவான விசா கொண்டு வருவது வளைகுடா செல்வோருக்கு சிறந்த பலனை அளிக்கும்.
அதே சமயம் ஏதேனும் ஒரு நாட்டில் பயணிக்கு தடை விதிக்கப்பட்டால் அது ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.