மும்பை, அக்டோபர் 21 – பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நோயோனிதா லோத் இந்திய அழகியாக – மிஸ் டிவா யுனிவெர்ஸ் (Miss Diva Universe) பட்டத்துடன் முடிசூட்டப்பட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மொத்தம் 15 பேர் பங்கேற்றனர். இதில் 21 வயதான நோயோனிதா வாகை சூடினார். இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற உள்ள அனைத்துலக அழகிப் போட்டியில் (மிஸ் யூனிவர்ஸ்) இந்தியா சார்பாக இவர் பங்கேற்ற உள்ளார்.
இப்போட்டியில் டெல்லியைச் சேர்ந்த அலன்கிரிதா சாஹாயா இரண்டாவது இடத்தையும், பெங்களூருவைச் சேர்ந்த ஆஷா பட் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
வணிகத்துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ள நோயோனிதாவுக்கு சிறந்த நடை அழகிப் பட்டமும் கிடைத்துள்ளது.
18 வயதில் மிஸ். பெங்களூரு அழகிப் போட்டியிலும் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள இவர், பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடப் போவதாகக் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முன்னாள் இந்திய அழகியும் நடிகையுமான இஷா குப்தா மற்றும் இந்தி நடிகர் அக்சய் இருவரும் நடுவர்களாகப் பணியாற்றினர்.
இந்நிகழ்ச்சியை முன்னாள் உலக அழகி லாரா தத்தா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்திய அழகிகளான சுஷ்மிதா சென் கடந்த 1994ஆம் ஆண்டும், லாரா தத்தா ஈராயிரமாவது ஆண்டிலும் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.