புதுடெல்லி, அக்டோபர் 24 – சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சுமார் 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பான முக்கிய முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அனைத்துலக நிதி நேர்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின் படி சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது 1948-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை பதுக்கிய கறுப்பு பணம் தான்.
கடந்த சில வருடங்களாக சட்ட விரோதமாக வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றுக் கொண்ட 100 நாட்களில் கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நீண்ட கோரிக்கைகளுக்குப் பிறகு ஐரோப்பிய அரசுகள், கறுப்பு பணம் பதுக்கிய 800 பேர் பற்றிய விவரங்களை மத்திய அரசிற்கு அளித்துள்ளன.
அவர்களில் முதல் 136 பேரின் விவரங்களை மட்டும் தற்போது வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “மத்திய அரசு பணம் பதுக்கியவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட வேண்டும். முதல் 136 பேரை மட்டும் தற்போது வெளியிட தீர்மானித்துள்ளது பாரபட்சமான செயல். இது குற்றம் செய்தவர்களை தப்பிக்க வழி வகுக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கியில் கடந்த 2012-ம் ஆண்டு 9514 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கப்பட்ட நிலையில் 2013-ம் ஆண்டில் மட்டும் 40 சதவிகித அளவிற்கு கறுப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 14000 கோடி ரூபாய் ஆகும்.
கறுப்புப் பணம் பதுக்கியவர்களை தண்டிப்பதை விட, கறுப்புப் பணத்தை அந்நிய வங்கிகளில் இருந்து மீட்டு நாட்டின் முன்னேற்றத்தில் அதனை முதலீடு செய்ய வேண்டும் என்பதே அடித்தட்டு மனிதனின் கோரிக்கையாக உள்ளது.