Home வணிகம்/தொழில் நுட்பம் நவம்பர் 7 முதல் மலேசியாவில் ஐபோன் 6 விற்பனை! 

நவம்பர் 7 முதல் மலேசியாவில் ஐபோன் 6 விற்பனை! 

601
0
SHARE
Ad

IPHONE6

கோலாலம்பூர், அக்டோபர் 24 – ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 திறன்பேசிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி மலேசியாவில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த மாத வெளியீடான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ், உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது.

#TamilSchoolmychoice

முதலில் ஆப்பிளின் முக்கிய வர்த்தக சந்தைகளாக கருதப்பட்ட குறிப்பிட்ட 9 நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டது. எனினும், ஆப்பிள் விற்பனைக்கு பெயர் பெற்ற சீனாவில் மட்டும் அந்நாட்டு அரசின் கட்டுப்பாடுகளால் விற்பனை தடை செய்யப்பட்டு இருந்தது.

புதிய தொழில்நுட்பம், கண் கவர் வெளிப்புறத் தோற்றம், சிறந்த செயலிகள் என ஐபோன் 6 பயனர்களை வெகுவாக ஈர்த்ததால், ஏனைய நாடுகளில் ‘கிரே மார்க்கட்’ (Grey Market) எனும் கள்ளச் சந்தை விற்பனை அதிக அளவில் நடைபெறத் தொடங்கின. இதனை உணர்ந்த ஆப்பிள் இம்மாத இறுதிக்குள் சுமார் 36 நாடுகளில் ஐபோன் 6-ஐ வெளியிட தீர்மானித்தது.

இந்நிலையில், மலேசியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அடுத்த மாதம் 7-ம் தேதி ‘டிஜி’ (DiGi) மற்றும் ‘மேக்சிஸ்’ (Maxis) நிறுவனங்கள் வெளியிட இருக்கின்றன. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

“மலேசியாவில் ஐபோன் 6 திறன்பேசிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன. எனினும் இதற்கான முன்பதிவு இம்மாதம் 31-ம் தேதியில் தொடங்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 வெளியிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது. மலேசியச் சந்தைகளில் இது எத்தகைய சாதனையை நிகழ்த்தும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.