ஹாங்காங், அக்டோபர் 24 – ஹாங்காங்கிற்கு சுய அதிகாரம் வழங்கப்படும் என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும், ஹாங்காங் நீதித் துறையில் சீனாவின் தலையீடு இருக்காது என்றும் அறிவித்துள்ளது
ஹாங்காங்கின் ஜனநாயகம், நீதித்துறை உட்பட அனைத்து உள்நாட்டு விவகாரங்களிலும் சீனா தனது ஆளுமையை பல வருடங்களாக செலுத்தி வந்தது. இந்நிலையில் அந்நாட்டு மாணவர்கள் அமைப்பு மற்றும் மக்கள் பெரும் போராட்டங்களை முன்வைத்து தொடர் கலவரத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்த விவகாரத்தில் சீனா தனது பிடியை முதல் முறையாகத் தளர்த்தி உள்ளது.
இது குறித்து சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “ஹாங்காங்கில் ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறைகள் என்ற கொள்கைக்கு செயல் வடிவம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹாங்காங்கிற்கு சுய அதிகாரம் மற்றும் எந்தவொரு தலையீடும் இல்லாத நீதித்துறை அதிகாரம் வழங்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிபர் ஜிங்பிங் பதவியேற்ற பின்பு, முதல் முறையாக கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மற்றும் மக்கள் நடத்திய இந்த போராட்டத்தினால் ஹாங்காங்கின் ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளும் கடந்த ஒரு மாத காலமாக முடங்கிப் போயின. சீனாவின் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு எடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இது பார்க்கப்படுகின்றது.