ஜெனிவா, அக்டோபர் 24 – உலக அளவில் அணு ஆயுதப் பரவலை தடை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது.
அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா, சீனா உட்பட 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது பாரபட்சமான ஒன்று. இதனால் அந்த ஒப்பந்தம் திருத்தபட வேண்டும்.
அதுவரை அதில் இந்தியா கையெழுத்திடாது என இந்தியா சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச அமைதி தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சார்பில் ஆயுத ஒழிப்பு மாநாட்டுக்கான பிரதிநிதி டி.பி. வெங்கடேஷ் வர்மா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
“அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், அதில் எந்தவொரு பாரபட்சமும் இருக்கக்கூடாது. அணு ஆயுத விவகாரத்தைப் பொருத்தவரை, இந்தியா எந்த நாட்டின் மீதும் முதலில் அணு ஆயுதங்களைப் பிரயோகப்படுத்தாது”.
“அதேபோல், அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீதும் இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்தாது. இது தொடர்பான முடிவில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.”
“ஆனால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை இணையும்படி வல்லரசு நாடுகள் வலியுறுத்துவது ஒருதலைபட்சமானது. அணு ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது பாரபட்சமான நடவடிக்கை ஆகும். எனவே, அணு ஆயுதமே இல்லாத நாடாக மாறி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் பேச்சுக்கே இடமில்லை.”
“அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தம் பாரபட்சமற்ற முறையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் இயற்றப் பட வேண்டும். அப்போது அதில் இணைய இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.