கோலாலம்பூர், அக்டோபர் 27 – சூளுரைத்தபடி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு 9.40 மணியளவில், தனது புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான நுருல் இசா மற்றும் பிகேஆர் கட்சித் தலைவியும், தனது துணைவியாருமான வான் அசிசா ஆகியோர் புடைசூழ, மலாயாப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் தனது வாகனத்தில் நுழைந்தார்.
பின்னர் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகியோரும் அன்வாருடன் இணைந்து கொண்டனர்.
அந்த வேளையில் பல்கலைக் கழகத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தெரு விளக்குகளும் அணைக்கப்பட்டன. மொத்த மலாயாப் பல்கலைக் கழக வளாகமே இருளில் மூழ்கியது.
இருப்பினும் மூடப்பட்டிருந்த துங்கு சேன்சலர் மண்டபத்தின் முன்னால் குழுமியிருந்த சுமார் 2,000 மாணவர்கள் முன்னிலையில் அன்வார் இப்ராகிம் ஏறத்தாழ இரவு 10.00 மணியளவில் எழுச்சிமிக்க உரையாற்றினார்.
“40 ஆண்டுகள் : மலாயாப் பல்கலைக் கழகம் தொடங்கி சிறைச்சாலை வரை” என்ற தலைப்பில் அன்வார் இப்ராகிம் சுமார் அரை மணி நேரம் உரையாற்றினார்.
ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட ஒரு வாகனத்தின் மீதேறி நின்று கொண்டு அன்வார் உரையாற்றினார்.
அன்வார் இப்ராகிம் மலாயாப் பல்கலைக் கழகத்தின் மலாய் மொழித் துறையின் முன்னாள் மாணவருமாவார்.
அன்வார் தனது உரையை முடித்துக் கொண்ட பின்னர் மலாயாப் பல்கலைக் கழக வாயில் வரை நடந்து செல்ல மாணவர்களும் கூட்டமாக அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
முன்பாக, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாணவர் சங்கத் தலைவர் ஃபாமி சைனோல் இன்று பிற்பகல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அமின் ஜலாலுடினுடன் தான் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், இருப்பினும் பல்கலைக் கழக நிர்வாகம் இன்றைய அன்வார் உரைக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மாலை 4.00 மணி முதற்கொண்டு அனைத்து பல்கலைக் கழக பணியாளர்களும் தங்களின் பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.