சான்பிரான்சிஸ்கோ, அக்டோபர் 28 – கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரி பேஜ்ஜிடமிருந்து முக்கியச் செய்தி காத்திருந்தது.
கூகுளின் ‘க்ரோம் இயங்குதளம்’ (Chrome Os) மற்றும் ‘அண்டிரொய்டு’ (Android) பிரிவுகளுக்கு தலைமைப் பொறுப்பினை வகித்து வந்த சுந்தர் பிச்சை, இனி கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய கூகுளின் பெரும்பாலான பிரிவுகளுக்கும் தலைமை வகிப்பார் என்பதுதான் அந்த செய்தி.
யார் இந்த சுந்தர் பிச்சை?
தமிழகத்தின் தலைநகரான சென்னையைச் சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் என்ற சுந்தர் பிச்சை, காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுகலைப் படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பும் படித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர், சுமார் 10 வருடங்களுக்குள் கூகுளின் மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்டிரொய்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்:
ஆண்டி ரூபினிடமிருந்து அண்டிரொய்டின் தலைமைப் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் வந்தது முதல் அதன் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் மிகப் பெரும் புரட்சி ஏற்பட்டது. ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் இயங்குதளங்களுக்கு நிகராக, திறன்பேசிகளுக்கான இயங்குதளமாய் அண்டிரொய்டு வளர்ந்தது.
சமீபத்தில் இந்தியாவின் வர்த்தகத்தை குறிவைத்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அண்டிரொய்டு ஒன் திட்டம் வரை அவரது அனைத்து முயற்சிகளும் கூகுளுக்கு பெரிதாக கை கொடுத்தன.
இதன் காரணமாகவே சுந்தர் பிச்சையிடம், தற்போது மிகப் பெரும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என்று ஊடகங்களால் கூறப்படுகின்றது. மேலும், அனைத்து துறைகளும் ஒற்றைத் தலைமையின் கீழ் வரும் பொழுது சிறப்பான ஒருங்கிணைப்பு இருக்கும் என்றும் கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய சந்தையைக் குறி வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் வணிக வியூகத் திட்டத்திற்கும் இந்தியரான சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய பொறுப்பு உதவக் கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
க்ரோம் இயங்குதளத்தின் வளர்ச்சி:
கணினிகளுக்கான இயங்குதளங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்கள் மத்தியில் மிகப் பெரும் இடத்தை பெற்றுள்ளது. எனினும், அதன் சமீபத்திய வெளியீடான விண்டோஸ் 8 பயனர்கள் மத்தியில் போதுமான வரவேற்பினைப் பெறவில்லை.
இந்நிலையில் பயனர்களுக்கு மிக எளியதான, திறன்பேசிகள், கணினிகள் என அனைத்து கருவிகளுக்கும் பொதுவான இயங்குதளத்தை உருவாக்கும் முடிவில் கூகுள் செயல்பட்டு வருகின்றது. ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் அதே போன்ற இயங்குதளத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.
எனினும், அண்டிரொய்டின் வளர்ச்சியைப் போல் க்ரோம் இயங்குதளமும் சுந்தர் பிச்சையின் சீரிய சிந்தனைகளால் வெற்றி பெரும் என்று கூகுள் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு எண்ணிக்கை அளவில் அதிகம் இருந்து வந்த நிலையில், தற்போது அந்நிறுவனங்களுக்கான தலைமைப் பொறுப்புகளிலும் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று வருகின்றனர்.