கோலாலம்பூர், அக்டோபர் 28 – அன்வார் இப்ராகிம் மீதான தகாத உறவு வழக்கில் விரைவாகவும், நியாயமாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மீது குற்றம் சாட்டியுள்ள சைஃபுல் புக்காரி அஸ்லான் (படம்) கோரியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளதாக தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், வாதங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
” அக்டோபர் 28ஆம் தேதி (இன்று) இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இதற்கு மேலும் வழக்கை இழுத்தடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது என நம்புகிறேன். ஏற்கெனவே 6 ஆண்டு, 2 மாதங்கள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தாமதப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்றார் அவர்.
“இது உண்மை வெளிப்படும் நேரம். இதில் எனது மற்றும் எனது குடும்பத்தின் மரியாதையும் எதிர்காலமும் அடங்கி உள்ளது. உண்மைக்காக போராடும் தனது படைப்புகளுக்கு எதிராக கடவுள் செயல்பட மாட்டார் என நம்புகிறேன்,” என்று சைஃபுல் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அன்வார் மீதான தகாத உறவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் தனது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். சிறை செல்லும் சூழ்நிலையும் ஏற்படலாம்.