சென்னை, அக்டோபர் 30 – நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“எனது ஆதரவாளர்கள் பல மதங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறார்கள். பெரும்பாலான கடிதங்களில் நான் பாஜகவில் இணையக் கூடாது என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது.
“என்னை பாஜகவில் இணைய வைக்க அக்கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அக்கட்சியில் இணையும் எண்ணம் இல்லை. அவ்வாறு நான் இணைவதை எனது ரசிகர்கள் பலர் ஏற்காமல் போகலாம்.”
“என்னை வாழ வைத்தது தமிழகமும் தமிழ் நாட்டு மக்களும்தான். தமிழகத்திற்கும் என் மக்களுக்கும் என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அதையே எனது ரசிகர்களும் விரும்புவார்கள்.”
“ஜெயலலிதா மேடம் சிறையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவருக்கு ஆறுதல் கூற வேண்டும் என்பதற்காகவே தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன். இதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. கலைஞர் கருணாநிதிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க முடியாது அல்லவா?” என்று கார்த்தி சிதம்பரத்திடம் ரஜினி மனம்விட்டுப் பேசியதாக ஜூனியர் விகடன் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் உற்சாகமும் நிலவி வருகிறது.