கொழும்பு, அக்டோபர் 31 – இந்திய-இலங்கை எல்லையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி பரபரப்புத் தீர்பளித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேனாவின் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐந்து மீனவர்களின் குற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே தூக்குத் தண்டனைக்கு எதிராக வரும் நவம்பர் 14-ம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ் ஈழம், கட்சத் தீவு உள்ளிட்ட காரணங்களால் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் மோடி அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.