புதுடெல்லி, அக்டோபர் 31 – இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் அதிகப்படியான சேமிப்பு மற்றும் புதிய திட்டங்களின் மூலம் 2016-2017-ம் ஆண்டில், 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பெரும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது. அதில் இந்தியாவின் தற்போதய வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 2015-16-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாகவும், 2016-17-ம் ஆண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது. வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா பயணிக்க முக்கிய காரணம் தற்போது நடைமுறையில் இருக்கும் அதிகப்படியான சேமிப்பு மற்றும் புதிய திட்டங்கள் தான் என உலக வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியை நிதி சந்தையின் பலவீனம், உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, அதிகப்படியான எண்ணெய் விலை, உலக அளவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகள் போன்றவை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.”
“எனினும், தற்போது கணக்கிடபட்டுள்ள வளர்ச்சி வீதங்கள் நிலைப் பெற வேண்டுமானால் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியினை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன் காரணமாக வருவாய் அதிகரிக்கும், உலக நாடுகளின் முதலீடுகளை எளிதாக கவர முடியும்” என்று உலக வங்கி கூறியுள்ளது.