மும்பை, நவம்பர் 1 – மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜக-சிவசேனா இடையேயான 25 ஆண்டுகால கூட்டடணி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போது முறிந்தது. இதனைத்தொடர்ந்து இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இதேபோல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையேயான கூட்டணியும் தேர்தலின் போது முறிந்தது.
இந்த கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. நான்கு முனை போட்டி நிலவியதால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற பரபரப்பான சூழலில், தேர்தல் முடிவுகள் வெளியான போது பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 288 இடங்களில் 123 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக வசப்படுத்திய இடங்களில் எண்ணிக்கை 123தான் என்பதால் பிற கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தது பாஜக.
ஆனால், துணை முதல்வர் பதவி, முக்கிய இலாக்காக்களுடன் கூடிய அமைச்சர் பதவிகளை தங்களுக்கு அளித்தால் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று சிவசேனா கெடுபிடி செய்தது.
இதனால் சிவசேனாவை ஒதுக்கியே வைக்க பாஜக திட்டமிட்டது. இந்த நேரத்தில்தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து 41 தொகுதிகளை வென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து அளிக்க தயார் என்றது.
இதனால் சிவசேனா நிலை மேலும் சிக்கலானது. இதனிடையே மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக அதாவது முதல்வராக தேவேந்திர பட்னாவிசை அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, எந்த கட்சியின் ஆதரவையும் கோராமல் தனித்தே ஆட்சியமைக்க பாஜக முடிவு செய்தது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ஆட்சியை தொடர பாஜக முடிவு செய்தது.
இதையடுத்து மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடந்தது. மராட்டிய ஆளுநர் வித்தியாசாகர் ராவ் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவர் கடவுளின் பெயரால் பதவி பிரமாணம் செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநில வரலாற்றில் இவர்தான் முதலாவது பாஜக முதல்வர்.