சிப்பாங், நவம்பர் 1 – ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உம்மி கல்சோம் பஹோக் என்ற 25 வயதான அப்பெண் அக்டோபர் 5ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ.2 அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவு பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் அவர் ஏர் ஏசியா விமானத்தில் புருணை சென்று, பின்னர் அங்கிருந்து இஸ்தான்புல் செல்லவிருந்ததாகவும், அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான அகிஃப் உசைன் என்பவரை திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் உம்மி கல்சோம் பஹோக்குக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.