சியோல், நவம்பர் 1 – தென் கொரியாவின் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்ததற்காக வட கொரியாவில் 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே நீண்ட காலப் பகை காரணமாக இரு நாடுகளின் உறவில் எந்தவொரு சுமூக நிலையும் இதுவரை இருந்ததில்லை.
தென் கொரியாவில் எடுக்கப்படும் படங்கள், காணொளிகள் மற்றும் ஊடகம் சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும் வட கொரியாவில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு பல ஒலி/ஒளி பரப்புக் கருவிகள் கறுப்பு சந்தை வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் கொரியாவின் தொலைக்காட்சித் தொடர்களை இணையம் வழியாக விதிமுறைகளை மீறி பதிவிறக்கம் செய்ததாகக் கூறி, 50-க்கும் மேற்பட்டோர் பொது இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை, வட கொரியாவில் செயல்படும் உள்நாட்டு செய்தி நிறுவனமும் மறைமுகமாக உறுதிபடுத்தி உள்ளது.
அரசின் கடுமையான நடவடிக்கை தொடர்பாக வட கொரிய மக்களுள் சிலர், கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இந்த விவகாரம் சமீபத்தில் தான் உலக நாடுகளின் கவனத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.