சியோல், ஆகஸ்ட் 20 – தென் கொரியா-வட கொரியா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லைகளில் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தென் கொரிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு வட கொரியா, இன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் வட மேற்கு நகரமான யோன்சினில் ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தென் கொரியா, அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி விட்டு, வட கொரியாவின் மேற்குப் பகுதியை நோக்கி பதில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவிற்கு ஆதரவாக, அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு வகையில் உதவி செய்து வருவதால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், வட கொரியாவிற்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் துணை நிற்கும். இந்த சூழல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என பொது நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.