வாஷிங்டன், ஆகஸ்ட் 20 – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (90) தனக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அதனை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரை தீவிர பரிசோதனை செய்த மருத்துவர்கள், புற்றுநோய் செல்கள் கார்ட்டரின் மூளையில் நான்கு இடங்களில் பரவியிருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து கார்ட்டர் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் முதலில் கல்லீரலில் மட்டும் தான் புற்றுநோய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த புற்றுநோய் செல்கள் மூளையின் நான்கு பகுதியில் பரவி உள்ளன. எனக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதாக நினைக்கிறேன். எனினும், எனக்கு பெரிய அளவில் வலியிருப்பதாகத் தெரியவில்லை.”
“எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கை கிடைத்துள்ளது. நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன். புதிய சாகசத்தை எதிர்நோக்கி உள்ளேன். மற்றவையெல்லாம் கடவுளின் கைகளில் தான் உள்ளது” என புன்னகைத்தவாறே அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேட்டி அமெரிக்கர்களை பெரும் துயரத்திற்கு ஆழ்த்தி உள்ளது. தற்போதய நிலையில், கார்ட்டருக்கு புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.