கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளன.
தேசிய அரசின் புதிய அமைச்சரவை குறித்து ஆராய, முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 இடங்கள்தான் கிடைத்தன.ஆனால், இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ரணில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டது.இதனால் இலங்கையில் இரு முக்கியக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் தேசிய அரசு உருவாகிறது.
எதிர்க்கட்சியாகச் சுதந்திரக் கட்சி செயல்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ராஜபக்சே.
ஆனால், சுதந்திரக் கட்சி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால் அந்த ஆசையிலும் மண் விழுந்துவிட்டது.
இதனால் அடுத்த மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.