வாஷிங்டன் : உயிருடன் வாழும் அமெரிக்க அதிபர்களிலேயே வயதில் மூத்தவர் ஜிம்மி கார்ட்டர். அவருக்கு வயது 98. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜியா மாநிலத்துக்காரர்.
இதற்கு முன்னர் ஜோர்ஜ் புஷ் (சீனியர்) உயிருடன் வாழும் அதிபர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார். ஆனால், 94-வது வயதில் அவர் காலமானார்.
தற்போது உயிருடன் வாழும் மூத்த அதிபரான ஜிம்மி கார்ட்டருக்கு முதுமை காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை வழங்கப்படுகிறது. அவரைக் காண்பதற்கும் நலம் விசாரிப்பதற்கும் அவரின் குடும்பத்தினரும், பேரப் பிள்ளைகளும் வரத் தொடங்கியிருக்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராகப் பதவியில் இருந்தார் கார்ட்டர். உலக நாடுகளுக்கிடையில் நிகழ்ந்த பல மோதல்களைத் தீர்த்து வைக்க அமைதிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். அதற்காக இவருக்கு 2002-இல் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.