சியோல் – கடந்த வாரம் வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, தனது பலத்தைக் காட்டும் வண்ணம், அமெரிக்கா இன்று தனது பி-52 (B-52) ரக போர்விமானத்தை கொரிய தீபகற்பத்தின் வான் வெளியில் பறக்கச் செய்தது.
தென் கொரியாவின் நகரான ஓசான் (Osan) மீது குறைந்த உயரத்தில் இந்த போர்விமானம் பறந்து சென்றது.
அமெரிக்க போர் விமானம் பி-52 கொரிய வான்வெளியில் பறந்து சென்ற காட்சி…
“இந்த இராணுவ நடவடிக்கை, அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையையும், அமெரிக்க மண்ணைத் தற்காக்கும் எங்களின் கடப்பாட்டையும் காட்டுவதாக அமைகின்றது” என பசிபிக் வட்டார அமெரிக்க இராணுவத்தின் பொறுப்பாளர் அட்மிரல் ஹாரி ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனையானது அனைத்துலகக் கடப்பாடுகளுக்கு எதிரானது. அமெரிக்க ஒருங்கிணைப்பு படைகள், இந்தோ-ஆசிய-பசிபிக் வட்டாரங்களில் தங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து இந்த வட்டாரத்தின் பாதுகாப்பையும், நிலைத் தன்மையையும் உறுதி செய்யும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பி-52 போர் விமானம் வெற்றிகரமாக கொரிய வான்வெளியில் பறந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க பசிபிக் தீவான குவாம்மில் உள்ள இராணுவத் தளத்துக்கு திரும்பியது.