காராக் – மதம் மாற்றம் செய்யப்பட்ட தனது குழந்தையைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திரா காந்தி தற்போது நாடு தழுவிய நிலையில் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
தனது போராட்டப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காராக் வந்தடைந்த இந்திரா காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, இன்று அவரது பிறந்த நாள் என்பதால், அந்த நிகழ்ச்சியும் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
காராக்கில் இன்று நடைபெற்ற இந்திராவுக்கு நீதி கேட்கும் போராட்ட நிகழ்ச்சியில் அவருடன் அவரது வழக்கறிஞர் எம்.குலசேகரன் (படம்: குலசேகரனின் டுவிட்டர் பக்கம்)
தனது பெண் குழந்தையை மீண்டும் பார்ப்பதற்கு தான் மிகவும் ஏங்குவதாகக் கண்கலங்கக் கூறி, தனது துக்கத்தை இந்த நிகழ்ச்சியில் இந்திரா காந்தி பகிர்ந்து கொண்டதாக, அவருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது வழக்கறிஞரும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதே கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா, தான் இந்திரா காந்தி நிலைமை குறித்து ஆழ்ந்த வருத்தமும், அனுதாபமும் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கின்றார். அதே வேளையில் இஸ்லாம் எவ்வாறு நியாயமான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றது என்பது குறித்தும் அவர் விளக்கியதாக குலசேகரன் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக தனது மகளைப் பார்க்க முடியாமல் இந்திரா காந்தி தவித்து வருவதாகவும் குலசேகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.