சென்னை, நவம்பர் 2 – தமிழக காங்கிரஸ் தலைவராக இதுவரை இருந்து வந்த ஞானதேசிகன் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் இந்த நியமனம் நடைபெற்றதாக அக்கட்சித் தலைமையகம் அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இளங்கோவனை அப்பொறுப்பிற்கு நியமித்துள்ளார் சோனியா.
“இன்று காலைதான் எனக்கு இத்தகவல் தெரியவந்தது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தொடர்பு கொண்டு பேசினார். என் மீது நம்பிக்கை வைத்து சோனியாவும், ராகுலும் இப்பொறுப்பை தந்துள்ளனர். அதற்காக என் நன்றியைத் தெரிவிப்பதுடன், எனது கடமையையும் சரிவர ஆற்றுவேன்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இளங்கோவன்.
இதற்கிடையே புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு ஞானதேசிகனும், ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தான் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை இளங்கோவன் திறம்பட சமாளிப்பார் என ஞானதேசிகன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தமிழகத்தில் முன்பு வலுவாக இருந்தபோது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அச்சமயம் அதன் தலைவராக இருந்த இளங்கோவன் ஓரளவு உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்