தற்சமயம் இந்தியாவில், வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீரஜ் அரோரா கூறியதாவது:-
“உலக அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 600 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் ஆகும். இதன் மூலம் மொத்த பயனாளர்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்”
“ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் வாட்ஸ் அப்பின் வளர்ச்சி உலக நிறுவனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், கடந்த ஏப்ரல் மாதம் வாட்ஸ் அப்பை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. இந்த வர்த்தகம் வாட்ஸ் அப்பிற்கு மகுடம் சேர்ப்பதாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தகவல் பரிமாற்றத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய வாட்ஸ் அப்பில், மற்றொரு புதிய அம்சமாக ‘தொலைபேசி அழைப்புகள்’ (VoiceCall) வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும்