ஒட்டாவா, நவம்பர் 3 – எபோலா நோய் தொற்று தீவிரமாக உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு கனடா அரசு விசா தடை விதித்துள்ளது.
எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக மேற்கூறிய 3 நாடுகளில் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நாடுகளில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், மாலி, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணிகள் செல்வதால், அங்கும் எபோலா நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது.
இதன் காரணமாக இந்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடை விதித்து இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவும் தற்போது அவர்களுக்கு விசா தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் அங்கு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
எபோலா நோய் பாதித்த நாடுகளை சேர்ந்த நோயாளிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்சிகிச்சை பெற விரும்புகின்றனர். எனவே அவர்களைத் தடுக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.