கோலாலம்பூர், நவம்பர் 3 – எம்எச் 370 பேரிடர் சம்பவத்தை மையமாக வைத்து இணையத்தில் சிலர் செய்துள்ள நையாண்டி மலேசியர்களை மனம் நோக வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் வலைதளங்களில் ஹாலோவன் தினத்தை முன்னிட்டு நையாண்டிகளாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை ஸ்டார் ஆன்லைன் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்ஸ்டாகிராம் உறுப்பினர் ஒருவர் ஆவிகளைப் போல் காட்சி அளிக்கும் மூன்று பெண்கள், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சின்னத்தை (லோகோ) கொண்ட விமான பணிப்பெண்களுக்கான அடையாள அட்டையை காண்பிப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
அப்படத்தை, ‘ஏதோ தவறு நடந்துள்ளது’, ‘மலேசியன் ஏர்லைன்ஸ்’, ‘எம்எச்370 விமானம்’ ஆகிய வார்த்தைகளுடன் ‘ஹாஷ்டேக்’கும் (hashtags) செய்துள்ளார்.
மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் மேலிம்சினாய், “எங்கள் நாடு இன்னமும் காணாமல் போன விமானத்தைத் தேடி வருகிறது. ஆனால் நீங்களோ இதை வைத்து கேலி செய்யலாம் என்று கருதி அதை உலகத்திற்கும் விளம்பரப்படுத்தி வருகிறீர்கள்,” என்று மேற்கண்ட படம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
இப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ள நிலையில், இதைக் கண்டு மலேசியர்கள் பலர் வருத்தம் அடைந்துள்ளனர்.
“இதுபோன்ற செயல்களால் மனித நேயம் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது,” என்று சாஷ் கேஜி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனாளர் சாயி ஜனனி, “இது அநியாயம். இதயமற்றவர்களே இதைச் செய்துள்ளனர்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இத்தகைய படங்களை இணையத்தில் வெளியிட்டவர்களில் யாரும் மலேசியர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.