நியூயார்க், நவம்பர் 5 – இந்தியாவையும், இந்திய இராணுவத்தையும் வீழ்த்தும் நோக்கத்துடன் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மறைமுகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், கடந்த 6 மாதங்களாக உள்ள தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
அப்போது அவர்கள், “ஆப்கன் மற்றும் இந்தியாவை குறிவைத்து தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து தங்களது முயற்சிகளை நடத்தி வருகின்றனர்.”
“ஆப்கனில் தற்போது நிலவும் நிலையில்லாத் தன்மையும் இவர்களுக்கு சாதகமாக உள்ளது. பாகிஸ்தானும் இந்திய இராணுவத்தை வீழ்த்த இவர்களை மறைமுகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது” என்று கூறியுள்ளனர்.
மேலும், “இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் ஹூரியத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடுமையாகத் தாக்கப்பட்டது.
“இந்தியாவில் நரேந்திர மோடி இந்துக்களுக்கு நெருக்கமாக இருப்பவராக பார்க்கப்படுவதே, இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம்.”
“எனினும், ஆப்கன் அதிபர் கர்ஸாய், இந்தியாவுடன் தங்களது நாடு கொண்டுள்ள இணக்கம் இதன் காரணமாக எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்று பகிரங்கமாக அறிவித்தார்” என்று பாதுகாப்புத் துறை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.