சென்னை, நவம்பர் 5 – காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதை தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை என கருத்துத் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதியகட்சி ஆரம்பிப்பதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.
தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி குறித்து திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுடன் தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வாசனின் இந்த முடிவு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “வாசன் காங்கிரசை விட்டு வெளியேறி இருப்பது ஒரே நாள் எடுக்கப்பட்ட முடிவல்ல. அவர் நீண்ட காலம் யோசித்து முடிவை எடுத்துள்ளார்”.
“மேலும் காங்கிரஸ் கட்சியில் வாசனின் ஆதரவாளர்களே அதிகளவில் இருந்துள்ளனர். இருப்பினும் கட்சியின் மேலிடத்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார் சோ.
இதேபோல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்துக் கூறுகையில், ‘தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இளங்கோவனுக்கு இது ஒரு கடினமான நேரம். பல்வேறு குழுக்களின் தலைவர்களை கட்டுக்குள் கொண்டு வரச் செய்ய வேண்டும்’ என்றார்.