பாகிஸ்தானில் வாகா எல்லையில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த 12 கிலோ வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியிறக்கத்தை பார்த்துவிட்டு திரும்பியவர்களில் 60 பேர் பலியாகினர், 200 பேர் காயம் அடைந்தனர்.
குருநானக்கின் பிறந்தநாளையொட்டி நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் இந்தியாவில் இருந்து லாகூரில் உள்ள தேவ் பிறந்த இடமான நான்கனா சாகேபுக்கு செல்வதற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத்துல் அஹ்ரார் மற்றும் மஹர் மெஹ்சூத் ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.
இது குறித்து இந்திய பாதுகாப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது, இந்த தாக்குதல் பலத்த பாதுகாப்பு உள்ள இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இது இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையே உள்ள பிரச்சனையை பெரிதுபடுத்த நினைத்து நடத்தப்பட்டது. இந்திய பகுதியில் குண்டை வெடிக்கச் செய்து சேதம் ஏற்படுத்த நினைத்து தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
குண்டு பாகிஸ்தான் பகுதியில் வெடித்தாலும் இந்திய பகுதியில் சுமார் 2 கிமீ தூரம் வரை வெடிசத்தம் கேட்டுள்ளது.