புது டெல்லி, நவம்பர் 5 – இணையம் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கூகுள். உலக அளவில் இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை 300 மில்லியனாக உயர்த்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுவரை ஆங்கில மொழியில் இருந்து வந்த ‘குரல் வழித் தகவல் தேடல்’ (Voice Search ), இனி இந்தி மொழியிலும், வரும் மாதங்களில் மற்ற வட்டார மொழிகளான தமிழ், மராத்தி மற்றும் பெங்காலியிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக கூகுள் இந்தியாவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், “இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும், 5 மில்லியன் மக்கள் புதிதாக இந்தப் பட்டியலில் இணைகின்றனர். இவர்களுக்கு துணைபுரியவே தற்போது குரல் வழி தேடுதலில் இந்தி மொழியை இணைத்து உள்ளோம். அடுத்தகட்டமாக, தமிழ், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளையும் இணைக்கும் திட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்திய மொழிகளின் இணைப்பு தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், “இந்திய வட்டார மொழிகளில் இணைய சேவை வர இருப்பது, பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களுள் ஒன்றான ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India)-வை வெற்றிகரமாக செயல்படுத்த உதவும். இதன் மூலம் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 கோடியைத் தொட்டு விடும்” என்று அவர் கூறியுள்ளார்.