கேமரன் மலை, நவம்பர் 6 – கேமரன் மலை அருகே கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானார் மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் 23-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட பெர்தாம் பள்ளத்தாக்கில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போய்விட்டார் என்றும், அவர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கேமரன் மலை தீயணைப்பு மற்றும் மீட்புப்படையின் துணை இயக்குநர் மோர்னி மாமட் தெரிவித்துள்ளார்.
தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த சிறுவன் டிராக்டர் ஒன்றின் மீது ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் அந்த சிறுவனை தேடும் பணி நடந்து வருகின்றது.
இதனிடையே, உலு மேரா என்ற இடத்தில் நேற்று இரவு 9.50 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானார். அதேவேளையில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஜாலான் குவாரி அருகே உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கார் பழுதுபார்க்கும் இடம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு இந்திய நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மலேசியர் ஒருவர் கடுமையான காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில், சுமார் 150 பேர், 37 குடும்பங்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.