சென்னை, நவம்பர் 7 – தனது பிறந்த நாளான இன்று நவம்பர் 7ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஏரி ஒன்றை தனது ரசிகர்களுடன் தூய்மைப்படுத்த உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கமல் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் 7ஆம் தேதி காலை முதல் மாலை வரை ஏரியை கமலுடன் சேர்ந்து தூய்மைப்படுத்துகின்றார்கள்.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டத்தை துவக்கினார். இத்திட்டம் தொடர்பில் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார் அவர்.
அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். பிரதமர் மோடி தனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்த கமல், தற்போது தூய்மைப் பணிக்காக முதன் முறையாக களம் இறங்குகிறார்.
தமிழகத்தில் மிகவும் மாசடைந்த ஏரிகளில் ஒன்றாக உள்ளது மாடம்பாக்கம் ஏரி. தூய்மைப் பணியின் முதல் இலக்காக இந்த ஏரியை தேர்வு செய்துள்ளார் கமல்ஹாசன்.
வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகிறார்.