கொழும்பு, நவம்பர் 8 – இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போரின் போது, இரு தரப்பிலும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து நடைபெற்று வரும் அனைத்துலக விசாரணையைக் குலைக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புகளையும் அச்சுறுத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“போர்க் குற்றம் குறித்து அனைத்துலக நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் கிடைத்துள்ள போதிய ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன், இலங்கை அரசு சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், விசாரணையில் பங்கெடுத்துள்ள பொது மக்களையும், மனித அமைப்புகளையும் கண்காணிப்பதன் மூலமும், அவமானப்படுத்துவதன் மூலமும் அச்சுறுத்தி வருகின்றது.”
“இலங்கைக்கு எதிராக மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தும், போர் முடிந்த 2009-ம் ஆண்டிலிருந்தே நடுநிலையான விசாரணையே செய்யப்பட்டு வருகின்றது. இருந்தும் இலங்கை அரசு விசாரணைக்கு தொடர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. மேலும், தவறான தகவல்களையும், உண்மையை திசை திருப்பும் தகவல்களையும் வேண்டுமென்றே பரப்பி வருகின்றது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.