கோலாலம்பூர், நவம்பர் 10 – அந்நிய முதலீடுகளும், அனைத்துலக வர்த்தகமும் மலேசியாவில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி உள்ளன என்று ஆக்ஸ்போர்ட் வர்த்தக குழுமம் (OBG) தெரிவித்துள்ளது.
உலக அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வரும் இந்த நிறுவனம், மலேசியாவின் வர்த்தகம் மற்றும் வாழ்க்கைத் தரம் தொடர்பான ஆய்வுகளை நடத்தி, சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘அறிக்கை: மலேசியா 2014’ (The Report: Malaysia 2014) என்ற பெயரில் வெளியாகி உள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“உயர்ந்து வரும் மலேசியப் பொருளாதாரத்தில், நுகர்வோர் சார்ந்த சேவைத் துறைகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன. எனினும், மலேசியா அதன் உற்பத்தி திறனையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்”
“மேலும், மலேசிய அரசு சொந்த நிறுவனங்களுக்கான ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், படிப்படியாக தாராளமயமாக்களுக்கு முன்வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவில் செயல்படும் வங்கிகள் பற்றி ஒபிஜி கூறுகையில், “2015-ம் ஆண்டில் ஏசியன் பொருளாதார கூட்டுறவில் மலேசியா முக்கிய மைல்கல்லை எட்டும்.
இதற்கு மலேசியாவின் அதிக நிதி பெற்ற வங்கிகளும், ஒருங்கிணைக்கப்பட்ட பங்குகளும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது” என்று கூறியுள்ளது.