நவம்பர் 10 – புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், அந்த சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் உடலியல் மற்றும் மேம்பாட்டு உயிரியல் பேராசிரியராக இருக்கும் பெஞ்சமின் பிக்மேன், வீட்டில் யாரேனும் புகைப்பிடித்தால், அவர்களால் வீட்டில் உள்ளோருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இதய நோய் மற்றும் சுவாச பிரச்சனைகளின் தாக்கம் அதிகம் உள்ளது என்று சொல்கிறார்.
சிகரெட் பிடிப்பதால் வாழ்நாளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், புகைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய், நுரையீரல் கோளாறு போன்றவற்றின் தாக்கம் அதிகம் இருக்கிறதா? அதேப் போல் அவர்களுக்கு அருகில் இருப்போருக்கு என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார்.இதனால் அவர் எலியைக் கொண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வில் ஒரு எலியை சிகரெட் புகை நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டியில் அடைத்து வைத்தார்.
அப்படி அடைக்கப்பட்ட எலியானது சில நாட்கள் கழித்து உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. அப்போது அந்த எலியை சோதனை செய்ததில், சிகரெட் புகையானது இன்சுலின் சுரப்பை தடுத்து, உடலில் உள்ள செராமைடு என்னும் கொழுப்பின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, உடல் எடையைத் தூண்டச் செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்.