Home வணிகம்/தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி 2015-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் தொடங்கப்படுமா?

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி 2015-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் தொடங்கப்படுமா?

727
0
SHARE
Ad

cimbbank_img1கோலாலம்பூர், நவம்பர் 11 – நாட்டின் மூன்று முக்கிய வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’ (Malaysia Building Society) , ‘சிஐஎம்பி குழுமம்’ (CIMB Group), ‘ஆர்எச்பி கேபிடல்’ (RHB Capital) ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த மாபெரும் இஸ்லாமிய வங்கியாக மாற்றும் முயற்சிகள் இறுதி வடிவத்தை எட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டு முதல் ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக ஆர்எச்பி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி இப்ராகிம் ஹாசான் கூறுகையில்,

“அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான முறையில் இயங்குவதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். எங்கள் வங்கிகளின் அனைத்து பிரிவுகள் தொடர்பான விசாரணை மற்றும் முன்மொழியப்பட்ட இணைப்பு குறித்த கணக்காய்வுகள் நடைபெற்று வருகின்றன.”

#TamilSchoolmychoice

“இஸ்லாமிய வங்கியை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டிற்குள் முடிவடைந்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமனம் செய்யப்படுவர், மேலும், இஸ்லாமிய வங்கியின் பின்புலத்தில் முக்கிய தொகுப்பாளராக எந்த வங்கி செயல்படும் என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியை உருவாக்குவதற்கான முதற்கட்ட திட்டங்கள் கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டன. மலேசிய வங்கித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கும் இந்த வங்கிகளின் இணைப்பு, நடைமுறைச் சிக்கல்களால் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது. விரைவில் அவை தீர்க்கப்பட்டு வங்கி துவங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.