Home நாடு யூ.பி.எஸ்.ஆர். தமிழ்-கணிதம் வினாத்தாள் கசிவு! பொறியியலாளர் மீது குற்றச்சாட்டு!

யூ.பி.எஸ்.ஆர். தமிழ்-கணிதம் வினாத்தாள் கசிவு! பொறியியலாளர் மீது குற்றச்சாட்டு!

1027
0
SHARE
Ad

upsrகெமாமான், நவம்பர் 11 – 2014-ஆம் ஆண்டுக்கான  யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ் மற்றும் கணித வினாத்தாள் கசிவு தொடர்பில் நேற்று இங்குள்ள கீழ்நிலை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் பொறியியலாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பேரா, ரசாயன பதனிடும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் 34 வயதுடைய பி.பிரேம்குமார் என்பவர் மீது இந்தக் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து பிரேம்குமார் விசாரணை கோரியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதிக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் இங்கு கெமாமான், தெலுக் காலோங் தொழிற்பேட்டை பகுதியில் மலே சினோ செமிக்கல் என்ற ரசாயன தொழிற்சாலையில் தமது ஆப்பிள் செல்பேசி மூலம் யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்கான தமிழ் மற்றும் கணித தேர்வு தாள்களின் பக்கங்களை கொண்டிருந்ததாக பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

1972-ஆம் ஆண்டு ரகசிய காப்புச் சட்டம் 8(1) (சி) பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

குற்றச்சாட்டை மறுத்து பிரேம்குமார் விசாணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் வெள்ளி பிணை மனுவில் விடுவிக்க பிரேம்குமாருக்கு நீதிபதி ரோஃபியா முகமட் அனுமதி அளித்தார்.

இவ்வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு ஆசிரியர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.