சென்னை ‘மியூசிக் அகாதெமி’ அரங்கில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவுக்கு கவிஞர் வைரமுத்து தலைவராக உள்ள வெற்றித் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய், ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ இந்தி வார இதழான “பாஞ்சஜன்ய”வின் இதழாசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர்.
திருவள்ளுவர் பிறந்த நாளை இந்திய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண்டும், தேசிய ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தமிழை விருப்பப் பாடமாகப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என மாநிலங்களவையில் குரல் எழுப்பினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாராணசியில் மகாகவி பாரதியார் வசித்த இல்லத்தை நினைவிடமாக மாற்றவும் அவர் முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பாராட்டு விழா நடத்த கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்துள்ளார்.
நீதிபதி கே.என். பாஷா, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராசன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க. திருவாசகம், வெற்றித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
“இந்த விழா அரசியல் கடந்தது. அரசியலில் மொழி இருக்கலாம். மொழியில் அரசியல் இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து. எனவே, அரசியல் கடந்த மொழிக்காக அனைவரும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.”
“திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தங்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகளை அனுப்புவதாக உறுதி அளித்துள்ளனர். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.”
“அரசியல் கலப்பின்றி தமிழுக்காக நடைபெறவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களும் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்” என்றார் வைரமுத்து.
திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான வைரமுத்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் பாஜக, தேமுதிக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.