இஸ்லாமாபாத், நவம்பர் 12 – பாகிஸ்தானின் கராச்சி அருகே நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் 56 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் முக்கிய நகரான கராச்சியில் இருந்து சுமார் 70 பயணிகளுடன் கைபர்-பக்துங்க்வா மாகாணம் நோக்கி சென்ற பேருந்தின் மீது லாரி ஒன்று திடீர் என மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 21 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் உள்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கோர விபத்து பற்றி மீட்புக் குழுவினர் கூறுகையில், “பேருந்தில் எண்ணெய் நிரப்புவதற்காக ஓட்டுநர் பேருந்தை சுக்குர் மாவட்டத்தின் தேரி புறவழிச்சாலையின் ஓரத்தில் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக அந்த வழியே வந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது” என்று கூறியுள்ளனர்.
இந்த கோர விபத்து பற்றிய தகவல் அறிந்த பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் மற்றும் சிந்து மாகாண ஆளுநர் இஷ்ரத்துல் எபாட் ஆகியோர் விபத்து குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.