கொழும்பு, நவம்பர் 12 – இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே, 3-வது முறையாகப் போட்டியிட அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவர் 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டார்.
ஆனால், இரண்டு முறை அதிபராக இருந்தவர் மூன்றாவது முறை போட்டியிட நினைப்பது சட்டவிரோதம் என்று முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா கருத்து தெரிவித்து இருந்தார். எதிர்க்கட்சிகளும் ராஜபக்சேவின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, அதிபர் தேர்தல் தொடர்பான சட்ட விளக்கங்களை அந்நாட்டு உச்சநீதிமன்றத்திடம் அதிபர் ராஜபக்சே தரப்பு கேட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றமும் தேர்தல் குறித்த உரிய சட்ட விளக்கங்களை இலங்கை அரசிடம் அனுப்பி வைத்துள்ளது. அதில் ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிட எந்தவொரு தடையும் இல்லை என்று கூறியுள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனால், ராஜபக்சே அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.