Home வணிகம்/தொழில் நுட்பம் அலிபாபா நிறுவனம் மூலமாக ஆப்பிள்பே சேவையை சீனாவில் நடைமுறைப்படுத்த ஆப்பிள் முயற்சி!

அலிபாபா நிறுவனம் மூலமாக ஆப்பிள்பே சேவையை சீனாவில் நடைமுறைப்படுத்த ஆப்பிள் முயற்சி!

681
0
SHARE
Ad

apple-payபெய்ஜிங், நவம்பர் 12 – ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஆப்பிள் பே’ (Apple Pay) திட்டத்தினை ஆசிய அளவில் முக்கிய சந்தையாகத் திகழும் சீனாவில் தடம் பதிக்க மிக முக்கியத் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.

அதாவது, சீனாவில் இணைய வர்த்தகத்தில் ஆளுமை செலுத்தி வரும் அலிபாபா நிறுவனத்தின் ‘அலிபே’ (Alipay) இணைய கட்டணம் தளத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள ஆப்பிள் தீர்மானித்துள்ளது.

இதற்கான அனைத்து செயல்பாடுகளும், படிப்படியாக நடைபெற்று வருவதாக அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜோசப் சாய் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அலிபாபா நிறுவனத்தின் “அலிபே” சேவை தற்சமயம் இணைய வர்த்தகத்தின் மூலம் கட்டணம் செலுத்த உதவும் தளமாகவே உள்ளது. இதனை அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் பொது சேவை தளமாக மாற்ற அதன் தலைவர் ஜாக் மா பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிதான் ஆப்பிள்பே உடனான கூட்டு வர்த்தகம். இது பற்றி ஜோசப் சாய் கூறுகையில், “ஆப்பிள்பே-அலிபே கூட்டு ஒப்பந்தத்தில் அலிபாபா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சிறந்த பின்புலமாக செயல்படும்.

பயனர்கள் ஆப்பிள் பே-இல், அலிபே கணக்கினை உபயோகப்படுத்தி தேவையான பணப் பரிவர்த்தனைகள் செய்ய இயலும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆப்பிள் மற்றும் அலிபாபா இடையில் உடன்பாடு ஏற்பட்டாலும், இந்நிறுவனங்களின் கூட்டு வர்த்தகத்திற்கு சீன அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆப்பிளின் வர்த்தகத்தை சீனாவில் முடக்க பல்வேறு மறைமுக வழிகளில் அந்நாட்டு அரசு முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதனை எத்தகைய அடிப்படையில் அந்நாட்டு அரசு ஏற்கும் என்பது தெரியவில்லை.