டெல்லி, நவம்பர் 12 – சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ஏராளம்.
அவரது ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர் என்று அரசியல் தலைவர்களே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ரசிகர் பட்டாளம் உள்ள ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு ரஜினிகாந்தின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்துள்ளார்.
வரும் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கும் 45-வது அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்குவது பற்றி அறிந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 2000-ஆம் ஆண்டு மத்திய அரசு ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. மேலும் அவருக்கு தமிழக அரசும் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.