Home நாடு விவேகானந்தா ஆசிரமம், சிலை பாதுகாக்கப்படும் – ஆசிரம நிர்வாகம் அறிவிப்பு

விவேகானந்தா ஆசிரமம், சிலை பாதுகாக்கப்படும் – ஆசிரம நிர்வாகம் அறிவிப்பு

764
0
SHARE
Ad

Vivekananda_Ashramகோலாலம்பூர், நவம்பர் 12 – தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமத்திற்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு நாடெங்கிலும் மலேசிய இந்தியர்களிடையே ஏற்பட்ட எதிர்ப்புகளைத் தொடர்ந்து, விவேகானந்தா கட்டிடம் இடிக்கப்படமாட்டாது என ஆசிரம நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

அதே வேளையில் அங்கிருக்கும் விவேகானந்தர் சிலையும் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று விவேகானந்தா ஆசிரம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“வருங்கால சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விவேகானந்தா ஆசிரமம். விவேகானந்தா ஆசிரம ஆதரவாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி ஆசிரம நிர்வாகம் இந்த அறிக்கையை வெளியிடுகின்றது. ஆசிரம நோக்கத்திற்கு ஏற்ப தொடர்ந்து கல்வி, கலாசார, ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”

“விவேகானந்தா ஆசிரமம் பதிவு பெற்ற தனியார் நிறுவனம் ஆகும். இதை விவேகானந்தா ஆசிரம நிர்வாகக் குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். விவேகானந்தா ஆசிரமம் மூன்று தமிழ்ப் பள்ளிகளையும் ஓர் இடைநிலைப் பள்ளியையும் நிர்வகித்து வருகின்றது. ஆசிரமத்தின் முதன்மை நோக்கம் கல்வியே ஆகும். இதனை அமைதியாகவும் செம்மையாகவும் நடத்தி வருகின்றது”

“ஆசிரம நிலம் 80 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது. அந்நிலத்தில் விவேகானந்தா ஆசிரமக் கட்டிடமும், 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட மாணவர் விடுதியும் சங்கீத அபிவிருத்தி சபாவின் முழுமை பெறாத கட்டிடமும் இருக்கின்றது. கல்வி, கலை, கலாச்சார, சமய நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து இடம் கொடுத்து வரும் பழைமையான விவேகானந்தா ஆசிரமக் கட்டிடம் உடைக்கப்படமாட்டாது. அது மேலும் சீர்படுத்தப்பட்டு பழைமை மாறாமல் பாதுகாக்கப்படும்”

“1930-ம் ஆண்டு இருந்த பிரிக்பீல்ட்ஸ் இப்போது மாற்றம் கண்டுவிட்டது. வளர்ச்சிக்கேற்ப ஆசிரம நிலத்தின் மதிப்பும் கூடியுள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஆசிரமக் கட்டிடமும் அதன் முன் உள்ள சிலையும் பாதுகாக்கப்படும். இவ்வளர்ச்சித் திட்டத்தால் பெறப்படும் நிதியைக் கொண்டு பள்ளிகளின் கல்வி, கலாச்சார, ஆன்மீக, சமூக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்”

“ஆசிரமக் கட்டிடத்திற்கான தனிப்பட்ட நிலப்பட்டா விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் பெறப்படும். ஆசிரம பள்ளிகளுக்கு அரசு நிதி கிடைத்தாலும் சமச்சீரான மாணவரை உருவாக்குவதற்கு ஆசிரமம் பல வழிகளில் உதவி வருகின்றது. மேம்பாட்டிற்கான குத்தகை, முறையாகவும் மேம்பாட்டுத் திட்ட ஆலோசக நிறுவன ஆலோசனை மற்றும் சொத்துடைமைப் பட்டறிவுக் கொண்டவர்களாலும் தேர்வு செய்யப்பட்டது” என்று அவ்வறிக்கை கூறுகின்றது.

63 ஆயிரம் பேர் எதிர்ப்பு

விவேகானந்தா ஆசிரமத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆசிரம பாதுகாப்புக் குழு நாடெங்கிலும் நடத்திய கையெழுத்து பிரச்சாரத்தில் சுமார் 48 ஆயிரத்து 201 பேர் ஆசிரமத்திற்கு அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கையெழுத்திட்டுள்ளனர்.

இதைத் தவிர்த்து பேஸ்புக் வாயிலாக சுமார் 14 ஆயிரத்து 618 பேர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை விவேகானந்தா ஆசிரம பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஜி.குணசேகரன் தெரிவித்துள்ளார்.