நியூயார்க், நவம்பர் 12 – எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோய், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நோயால் இதுவரை 5,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
13,000-க்கும் மேற்பட்டோர் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எபோலா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நோயை தடுக்க அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆப்ரிக்க நாடுகளில் இருந்து நியூயார்க், நியூஜெர்ஸி முக்கிய நகரங்களுக்கு வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எபோலா பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சுமார் 21 நாட்கள் வரை அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், ஆப்ரிக்க நாடான கியூனாவில் பணிபுரிந்த அமெரிக்க மருத்துவர் ஸ்பென்சர்(33) என்பவருக்கு எபோலாவின் பாதிப்பு இருப்பது கடந்த மாதம் 23-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஸ்பென்சருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனை கட்டத்தில் உள்ள புதிய மருந்துகள் கொடுக்கப்பட்டன.
தீவிர சிகிச்சைக்கு பின் ஸ்பென்சர் குணமடைந்ததார். இதையடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். மருத்துவர் ஸ்பென்சருக்கு அளிக்கப்பட்ட சிசிக்சை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.
எபோலா நோய்க்கு மருந்துகள் இல்லை என்ற நிலையில் இந்நோய் பாதித்த ஒருவர் முற்றிலுமாக குணமடைந்திருப்பது மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.