பெய்ஜிங், நவம்பர் 13 – அமெரிக்காவும், சீனாவும் கரியமில வாயு வெளியேற்றத்தின் மூலம் வளிமண்டலம் மாசடைவதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளன.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கும் நேற்று மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விவகாரத்தில் இதுவரை மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்த சீனாவும், அமெரிக்காவும் எதிர்பாராத விதமாக இந்த புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 2020-ம் ஆண்டிற்குப் பிறகு, தங்களது நாடுகள் மூலம் மாசு வெளியேற்றப்படுவதை எந்த அளவிற்குக் குறைப்பது என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட விவாதம் மேற்கொண்டதாகவும்.
அதன் பின்னர் மாசு கட்டுப்பாடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து ஒற்றுமைகளை அந்த ஒப்பந்ததில் குறிப்பிட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி 2005-ம் ஆண்டில் தமது நாடு வெளியேற்றிய மாசுபாட்டைவிட 26 முதல் 28 சதவீதம் வரை குறைவான மாசுபாட்டை 2025-ம் ஆண்டில் வெளியேற்ற அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகவும்,
2030-ம் ஆண்டிற்குள் மாசு வெளியேற்றத்தையும், கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமான படிம எரிபொருள் பயன்பாட்டையும் குறைந்தபட்ச அளவுக்குக் குறைக்க சீனா தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் ஒப்பந்தத்தை சீனா முதல்முறையாக ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.