புதுடெல்லி, நவம்பர் 14 – இந்தியாவில் ‘கிளவுட்’ (Cloud) சந்தைகளுக்கு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வர்த்தகம் இருப்பதை உணர்ந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று கிளவுட் தரவு மையங்களை உருவாக்க தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
நவீன காலத்தில் தரவுகளை சேமிக்க, மேலாண்மை செய்ய, செயல்படுத்த தனித்தனியான கணினிகள் போதாத நிலையில், உலகளவில் வலை அமைப்பை ஏற்படுத்தி நினைவகம், வளங்கள் என அனைத்தையும் அனைவரும் பயன்படுத்த உருவாக்கப்பட்ட செயல்முறைதான் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ (Cloud Computing).
இந்தியாவில் இந்தத் துறையின் வர்த்தகம் அதி விரைவாக வளர்ந்து வருகின்றது. முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கிளவுட் மூலமாக அனைத்து கணினி சார்ந்த தேவைகளையும் நிறைவேற்ற முயன்று வருகின்றனர். இதனால் கிளவுட் சந்தை இந்தியாவில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சத்யா நாதெல்லா கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த போது இந்தியாவில் இருக்கும் கிளவுட் செயல்முறைக்கான வாய்ப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருப்பதை உணர்ந்தார். அதன் காரணமாக இந்தியாவில் மும்பை, புனே மற்றும் சென்னையில் புதிய கிளவுட் தகவல் மையங்களை அமைக்க மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது.
எனினும், கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இந்தியாவில் கிளவுட் தகவல் மையங்கள் அமைக்க முன்னணி நிறுவனங்கள் தயக்கம் காட்டின. அதற்கு இந்தியாவின் கட்டமைப்பு, பேட்ச் இணையம் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.